கடந்த ஜனவரி மாதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்கள் சம்பளத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை( 17 b) எடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை 17 பி-யை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 6ஆம் தேதி வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், செப்டம்பர் 13 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பேரணியும் நடத்தப்பட்டது. மேலும் நாளை மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை இன்று தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பணியாளர் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த பின்னரே அரசுகளின் கோரிக்கை குறித்து எடுக்கும் முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.