ஜாக்டோ ஜியோ அமைப்பின் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அதில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மோசஸ், சுரேஷ், அன்பரசு, மாயவன், வெங்கடேசன், தாஸ், தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, ”2019ஆம் ஆண்டு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 5,100 பேர் மீதான 17பி குற்றக்குறிப்பாணை, குற்றவியல் நடவடிக்கை, பணி ஓய்வுநாளில் தற்காலிக பணிநீக்கம் ஆகியவற்றை ரத்துசெய்தல் தொடர்பாக அரசிடம் தொடர் முறையீடுகள் அளித்தும், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ரத்துசெய்யப்படாமல் நிலுவையிலேயே இருக்கிறது. எனவே அரசு உடனடியாக அவற்றை ரத்து எய்ய வேண்டும்.
பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்துசெய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்“ ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்தீர்மானங்கள் தொடர்பாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விவாதித்து நல்ல முடிவினை அரசு மேற்கொள்வதற்கான நடவடிக்கையாக, அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து மனு அளிக்க இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டங்களில் உள்ள ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சந்தித்து மனு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலை வழங்குக; இல்லையேல் ஆட்சியரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்க - நீதிபதி உத்தரவு