சென்னை: வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், ”நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து மண்டல பொறுப்பாளர் உடன் ஆலோசனை நடைபெற்றது. மண்டல பொறுப்பாளர்கள், வேட்பாளர் பட்டியல் கொடுத்துள்ளனர். இப்பட்டியல் இறுதி செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
தனித்து போட்டியிடுவோம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும். முறைகேடுகளை மீறி தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்போம். அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தை தவறு. தைரியம் இல்லை எனச் சொல்லாம், வார்த்தைகள் சரி இல்லை. அதிமுகவிற்கு தைரியம் இல்லை என்பது உண்மை தான்
கரோனா பரவல் இருக்கும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரு மாதம் தள்ளி அறிவித்திருக்கலாம். இருப்பினும் நாங்கள் போட்டியிடுவோம். கரோனா அதிகமாக இருக்கும் நிலையில் தேர்தல் நடத்துவது ஆளும் கட்சியின் இயலாமை” எனத் தெரிவித்தார்.