ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை அடுத்த குல்லூரில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன், கருப்பராயன், கன்னிமார் மற்றும் குடும்ப தெய்வங்கள் கோயிலில் வழிபாடு நடத்த தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி எம். சேகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 2015ஆம் ஆண்டு தொடரப்பட்டது.
இறுதி தீர்ப்புக்காக நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று(ஆகஸ்ட் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஒவ்வொரு முறை விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்போது மனுதாரர் சேகர் தரப்பிற்கும், சாமிநாதன் மற்றும் ஜெகன்நாதன் தரப்பிற்கு தகராறு ஏற்படுகிறது. கடந்த மே மாதம் நடந்த அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கடந்த ஜூன் 18ஆம் தேதி இரவு திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது.
அப்போதும் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், ஈரோடு வட்டாட்சியர் முன்னிலையில் கோயில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி கூறுகையில், கோயில் வழிபாட்டில் இரு தரப்புக்கும் சுமூக உடன்பாடு ஏற்படுவதாக தெரியவில்லை. வருவாய் மற்றும் காவல் துறை ஆகியவற்றின் ஆற்றலை வீணடிக்க விரும்பவில்லை.