பிரான்ஸ் கலாசார மன்றம் மற்றும் உலக தமிழ் சங்கம் மதுரை ஆகியோர் இணைந்து முத்தமிழ் விழாவினை இணைய வழியில் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், " தமிழ் என்பது மொழி மட்டும் அல்ல அதுதான் நம் வாழ்வின் வழி. தமிழ் மொழி என்பது சொற்களும் அதன் பொருளும் இணைந்த கூட்டு தொகுப்பு அல்ல. அதுதான் நம்முடைய அடையாளம். உலக மொழிகளுக்கு எல்லாம் உயர் மொழியாய் திகழ்வது நம்முடைய அன்னை மொழி தமிழ் மொழியே ஆகும். உலகெங்கும் பரவி நிற்கும் ஆங்கில மொழியாக இருந்தாலும், இந்தியாவில் பரவி இருக்கும் இந்தி மொழியாக இருந்தாலும் உலகில் உள்ள எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழியில் கூறப்பட்டு இருக்கும் மொத்த கருத்தை 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக முன்னாள் பிரதமர் நேருவிடம் நம்முடைய மூத்தறிஞர் ராஜாஜி எடுத்துக்காட்டிய பெருமை மிக்க மொழி தமிழ் மொழி.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மொழியாக உள்ள நம் தமிழ் மொழியைப் புகழ்ந்துப் போற்றிட வேண்டியதும், அழியாது காத்திட வேண்டியதும் மென்மேலும் வளர்த்திட வேண்டியதும் நமது கடமையாகும் .முச்சங்கம் வைத்து வளர்த்த தமிழை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்கள் மூலம் வளர்க்க பாடுபட்டார். வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் தமிழ் வளர்க்க நிதி ஒதுக்கீடும் செய்தார்.
தமிழ் மொழி அறிஞர்களுக்கு விருது வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம். ஜி.ஆர் கொண்டு வந்தவர் . தமிழ் அறிஞர்களுக்கு அவருடைய ஆட்சி காலத்தில் 4 விருதுகள்,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் 55 விருதுகள், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 74 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.