இயேசு அழைக்கிறார்...! சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் இயங்கிவரும் கிறிஸ்தவ மதப்பிரச்சார நிறுவனம். இதற்கு பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இயக்குநர்களாக இருந்து வருகின்றனர். மேலும், கோவையில் காருண்யா பல்கலைக்கழகம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களையும் பால் தினகரன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கல்வி நிறுவனம், ஜெபக் கூட்டங்களிலிருந்து வரக்கூடிய வருமானத்தை இயேசு அழைக்கிறார் கூட்டங்கள் மூலம் குறைத்து காட்டி, வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரிதுறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், தமிழகம் முழுவதுமுள்ள பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை அடையாறில் உள்ள தலைமை அலுவலகம், பாரிமுனை கடற்கரை ரயில் நிலையம் எதிரில் உள்ள அலுவலகம் மற்றும் ஜெபக்கூடம், கோவையில் காருண்யா பல்கலைகழகம் உள்ளிட்ட 28 இடங்களில் நடைபெற்று வரும் இச்சோதனையில் சுமார் 200க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், பால் தினகரனின் வீடு அமைந்துள்ள அடையாறு ஜீவரத்தினம் நகர், அவரது உறவினர்கள் சிலர் வீடுகளிலும், கார்ப்ரேட் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.