சென்னை: வேலூர் மாவட்டம், பொன்னை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் - சத்யா தம்பதியருக்கு, லத்திகா என்ற ஐந்து வயது பெண் குழந்தையும், ஹாசினி என்ற மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் சத்யா மூன்றாவதாகவும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மூன்றும் பெண் குழந்தைகள் என்பதால், தன்னை துரதிர்ஷ்டசாலி என சமூகம் இகழ்ந்ததால் விரக்தி அடைந்த சத்யா, முதல் குழந்தையான லத்திகாவை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ததுடன், தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தாய் சத்யா காப்பாற்றப்பட்ட போதும் இரு குழந்தைகளும் இறந்துவிட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த வேலூர் விரைவு நீதிமன்றம், சத்யாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சத்யா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பரதச்சக்கரவர்த்தி, பெண் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை இழிவாக எண்ணும் போக்கில் இருந்து சமூகம் இன்னும் தன்னை திருத்திக் கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது என்று வேதனை தெரிவித்தார்.