இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்று உச்சம் தொட்டபோது உயிரைத் துச்சமெனக் கருதி பொதுச்சேவைக்கு வந்தார்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தச் செவிலியரைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அந்தப் பதிவில் இரண்டு பக்க அறிக்கையையும் இணைத்திருந்தார். அதில் அவர், "கரோனா பேரிடரின்போது நம்மைக் காத்துநின்ற செவிலியரை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்வதே அறம். கரோனா முதல் அலையின்போது தமிழ்நாட்டில் சுமார் மூன்றாயிரம் செவிலியர் மருத்துவத் தேர்வாணையத்தால் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர்.
செவிலியரின் வாழ்வும் மலர்ந்துவிடும் என்னும் நம்பிக்கை
இவர்களுக்கு 12,000 முதல் 14,000 ரூபாய் வரை தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. தங்குமிடமும் உணவும் அரசு சார்பில் அளிக்கப்பட்டன. தொற்று உச்சம்கண்ட காலத்திலும் சரி, இப்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருக்கும்போதும் சரி, தங்களது உயிரைப் பணயம்வைத்து அர்ப்பணிப்புடன் இந்தச் செவிலியர் பணியாற்றினார்கள்.
இவர்களைத் தமிழ்நாடு பூப்போட்டுப் போற்றியது நினைவிருக்கலாம். ‘கருணையின் வடிவமாகவே செவிலியரைக் காண்கிறேன்' என்று இன்றைய முதலமைச்சரும் மனம் நெகிழ்ந்துப் பாராட்டினார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி நிரந்தரமற்ற சூழலில், உரிய தங்கும் வசதிகள்கூட இல்லாத நிலைமையில் மருத்துவச் சேவையாற்றிவருகிறார்கள் இந்தச் செவிலியர்.
இன்றைய முதலமைச்சர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, செவிலியரைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினார். திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் ஆயிரத்து 212 ஒப்பந்த முறை செவிலியரைப் பணி நியமனம் செய்தது. மீதமுள்ள செவிலியரின் வாழ்வும் மலர்ந்துவிடும் என்னும் நம்பிக்கை துளிர்த்தது.