சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனம் நகை மீதான் கடன் மற்றும் முதலீடு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டியாக தரப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த கவர்ச்சி விளம்பரத்தை பார்த்து ஏராளமான பொதுமக்கள் பணத்தை செலுத்தி வந்தனர். ஆர்.பி.ஐ அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்வதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களான பாஸ்கர், மோகன்பாபு, உஷா, ஹரிஷ், செந்தில்குமார், ராஜசேகர், பட்டாபிராமன், மைக்கெல் ராஜ் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக ஆருத்ரா கோல்ட் டிரெடிங் கம்பெனிக்கு சொந்தமான சென்னை உட்பட 26 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று (மே. 24) சோதனை மேற்கொண்டனர். அதிக வட்டி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் பணம் பெற்று இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.