சென்னை: கடந்த 55 ஆண்டுகளில், 6 ஆயிரம் ஹெக்டேர் பெருநிலத்தை 600 ஹெக்டேராக தின்றுத் தீர்க்க முடியுமா என்றால், முடியும் என்று நிருபித்து வருகிறார்கள் சென்னையில் வசிக்க வந்தவர்கள். வளர்ச்சி என்று பெயரிட்டு, விளையாட்டாக செய்வது போல், 10 விழுக்காட்டிற்கும் அதிகமான பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை களவாடியிருக்கிறார்கள், வசதிக்காக வளர்ச்சியை விரும்பும் சென்னைவாசிகள். சென்னைக்கும் வங்கக்கடலுக்கும் இடையில் நீர்கோர்த்து கிடக்கிற அந்த ஈரநிலம், தன் இறுதி மூச்சை இழுத்துப்பிடித்துக் கொண்டு கிடக்கிறது.
நீராகவும் இல்லாமல், நிலமாகவும் இல்லாமல் ஒரு பல்லுயிர் சூழலை தன்னுள் கொண்டிருக்கும் சேறுபூத்துக் கிடக்கும் ஈரநிலம்தான் சதுப்பு நிலம். ஒரு காலத்தில் மத்திய கைலாஷிலிருந்து விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், இன்று பெருங்குடிக்கு பக்கத்தில் எனச் சுருங்கி கிடக்கிறது. எப்போதும் சேறு பூத்துக்கிடக்கும் சதுப்பு நிலங்கள், செயல் தன்மையில் ஒரு நீர்ப்பிடிப்பு பகுதியைப் போலவே செயல்படுகின்றன. நிலத்தடிநீர் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சதுப்பு நிலங்கள் தேவைக்குப் போக உள்ள உபரி நீரை மட்டுமே கடலுக்கு அனுப்புகின்றன.
பருவ காலமாற்றங்களுக்கேற்ப நீர் இருப்பு, குறைவான ஆழம், தேவையான உணவு உற்பத்தி என பல்லுயிர் சூழலுக்கு ஏற்ற தகவமைப்பில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு காட்டில், 178 வகையான பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையான பாம்புகள், 10 வகையான பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 7 வகையான ரோட்டிஃபெரா, 10 வகையான பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 14 வகையான புரோட்டோசோவாக்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என விலங்குகள் தாவரங்கள் என, 625க்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்கின்றன. பல பறவைகள் வலசை வந்து போகின்றன.
இத்தனை பெரிய பல் உயிர்ச்சூழலை இயற்கையின் கண்ணோட்டத்துடன் அணுகாமல் தமிழ்நாடு அரசு ஒரு பொறியாளர் கண்ணோட்டத்தோடு அணுகுவதாக வேதனை தெரிவிக்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ டாமின், " அரசின் வளர்ச்சித் திட்டங்கள், தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி குடிருப்புகள் ஆகியவைகளின் ஆக்கரமிப்புகளால், 10 மடங்கு சுருங்கி விட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அரசு இன்னமும் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர் நிலையைப் போலவே பாவிக்கிறது. தென் சென்னையின் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட முதலமைச்சர், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தூர்வாரப்படும் எனத் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது. இயற்கையாக உருவான இந்த சதுப்பு நிலத்தை ஆழப்படுத்துவது, தூர்வாருவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ராம்சார் பகுதியாக அறிவிக்க தகுதியுள்ள பள்ளிக்கரணை பகுதியை பாதுகாக்க, எஞ்சியிருக்கும் பகுதிகள் முழுமையாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்கிறார்.
பள்ளிக்கரணையின் ஒரு சில பகுதிகள் வனத்துறையிடம் இருந்தாலும், சென்னை மாநகராட்சியும் பொதுப்பணித்துறையும் சதுப்புநிலத்தைப் பயன்படுத்தி வருகின்றன. மாநகராட்சி, 75 ஹெக்டேர் பரப்பளவில் குப்பைக் கிடங்கை ஏற்படுத்தி, நாளொன்றுக்கு, 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளைக் கொட்டியும், அதைத் தீ வைத்துக் கொளுத்தியும், பல்லுயிர் சூழலைப் பாழ்படுத்தி வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் வசிக்கவரும் பறவைகள், உயிரினங்களுடன் அருகாமையில் வசிக்கும் மனிதர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.