சென்னை: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது. மேலும் பாமகவின் நீண்டக்கால கோரிக்கையான 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு ஒதுக்கி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசாணையை பிறப்பித்தது.
இந்த யுக்தியை பயன்படுத்தி தேர்தலில் பாமக தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி வகையைச் சூடலாம் என கருதப்பட்ட நிலையில் பாமக வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் பாமக
பாமக தமது வேட்பாளர்களை வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிறுத்தியது. கவுண்டர்களும், வன்னியர்களும் அதிகமுள்ள தொகுதிகளான சேலம் (மேற்கு), மேட்டூரில் பாமக வேட்பாளர்களை களமிறக்கியது. இதுபோக, வன்னியர்கள் அதிகம் இல்லாத தொகுதியான ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தியது
எனினும், பாமகவின் இந்த யுக்தி தேர்தலில் எடுபடவில்லை. 23 தொகுதிகளில் தேர்தலை சந்தித்த பாமக, சேலம் மாவட்டம் மேட்டூர், சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் என மொத்தம் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாமகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியும் சொற்ப இடங்களிலே வென்றதால் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.