தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுகவில் சங்கமமாகிறதா அதிமுக? - ஐ.பி.க்கு ஓபிஎஸ் சொன்ன 'நச்' பதில்! - ஓபிஎஸ் அறிக்கை

அதிமுக விரைவில் திமுகவில் சங்கமமாகும் என்ற ஐ. பெரியசாமியின் கருத்துக்கு, பதிலடி தரும்வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக பல்வேறு விவகாரங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவரது அறிக்கையில் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

ஐ. பெரியசாமிக்கு ஓபிஎஸ் பதிலடி
ஐ. பெரியசாமிக்கு ஓபிஎஸ் பதிலடி

By

Published : Feb 25, 2022, 3:40 PM IST

சென்னை:கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் செயற்கையான வெற்றியைப் பெற்றுவிட்டு, அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்காது என்றும், அது திமுகவில் சங்கமமாகிவிடும் என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி போட்ட அதிரடி அரசியல் குண்டை இடையில் மறித்து தாக்கி அழிக்கும்வண்ணம் ஓபிஎஸ் அறிக்கை வாயிலான ஏவுகணை பதிலடியைத் தந்துள்ளார்.

அதில் ஓ. பன்னீர்செல்வம், ஐபி-யின் பேச்சு கேலிக்கூத்தாக இருப்பதாகச் கூறினார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு குடும்பக் கட்சி; ஓர் ஆற்றினைப் போன்றது எனக் குறிப்பிட்ட ஓபிஎஸ், ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மாபெரும் மக்கள் இயக்கம் என்றும், கடலினைப் போன்றது எனவும் பெருமிதத்துடன் சொன்னார்.

ஆறுதான் கடலில் போய் கலக்குமே தவிர, கடல் ஆற்றில் போய் கலக்காது என்பதை ஐ. பெரியசாமிக்கு முதலில் தெளிவுப்படுத்திக் கொள்வதாகச் சுட்டிக்காட்டினார் ஓபிஎஸ்.

இந்திய வரலாற்றிலேயே திமுக ஆட்சியில்தான் தேர்தல் ரத்து

திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த அக்கட்சியின் முன்னணித் தலைவர்களைப் பட்டியலிட்ட ஓபிஎஸ், திமுக கூடாரமே காலியானதையும் நினைவூட்டினார். அதற்குப் பிறகு 13 ஆண்டுகள் திமுக வனவாசம் இருந்ததை ஐ. பெரியசாமி மறந்துவிட்டார் போலும் என வரலாற்றை அசைபோட்டு நினைவுபடுத்தினார்.

இந்திய வரலாற்றிலேயே மாநகராட்சிக்கான தேர்தல் உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது திமுக ஆட்சிக் காலத்தில்தான் என்று சொன்ன அவர், சென்னை உயர் நீதிமன்றத்திடமிருந்தே 'நற்' சான்றிதழ் பெற்ற கட்சி திமுக என்றார் வஞ்சப்புகழ்ச்சியோடு.

  • "பொது வாழ்வில் உள்ள வெளிச்சம் மயக்கமூட்டும் ஒளி. இதனால் மகிழவே கூடாது என்பதல்ல. அது முடியாத காரியம். இதனால் மயக்கமடைந்து விடக்கூடாது. அந்த மயக்கம் வராமலிருக்கத்தான் புகழுரைக் கேட்கும்போது, தூற்றுபவரும் உள்ளனர் என்பதை மறவாமலிருக்க வேண்டும். புகழ்பவர்களே பிறகு இகழ்வார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மன மயக்கம் ஏற்படாது"

என்று அண்ணா உதிர்த்த சொல்லை மேற்கோள்காட்டிய ஓபிஎஸ், தற்போது ஐ. பெரியசாமி மயக்கத்தில் இருப்பதாகவும், மேலே குறிப்பிட்ட அண்ணாவின் பொன்மொழியைப் படித்துவிட்டு மயக்கத்திலிருந்து அவர் விடுபடுமாறும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் .

உண்மையான மக்கள் இயக்கம் அதிமுக

'உண்மையான மக்கள் இயக்கம்' என்று ஜெயலலிதா குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அக்கட்சி மக்களுக்காக இயங்கும் என்றார். மேலும், திமுகவில் ஒருநாளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சங்கமமாகாது எனவும் ஐ. பெரியசாமிக்குத் தனது பதிலடியுடன் தெளிவுப்படுத்தி அறிக்கையை நிறைவுசெய்தார் ஓ. பன்னீர்செல்வம்.

இதையும் படிங்க: திமுக செயற்கையாக வெற்றி பெற்றிருக்கிறது

ABOUT THE AUTHOR

...view details