தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பழைய சாலைகளை அகழ்ந்தெடுத்த பிறகு புதிய சாலை அமைக்க உத்தரவு

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதிய சாலைப் பணிகள் மேற்கொள்ளும்போது பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்த பிறகு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு தலைமைச் செயலர் வெ. இறையன்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு
அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு

By

Published : Oct 18, 2021, 11:03 AM IST

சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 போக்குவரத்துச் சாலைகளும், ஐந்தாயிரத்து 270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உள்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டுவருகிறது.

இச்சாலைகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தூய்மைப் பணிகள், சேதமடைந்த சாலைகளைக் கண்டறிந்து சீரமைத்து சரிசெய்தல் போன்ற பல்வேறு பணிகள் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

சாலைப் பணிகள் குறித்து புகார் அளிக்க அறிவிப்பு

சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் 1.08 கி.மீ. நீளத்தில் 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலைப் பணிகளை தலைமைச் செயலர் வெ. இறையன்பு பார்வையிட்டுப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

மேலும், சாலைப் பணிகளை மேற்கொள்ளும்போது பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து புதிய சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பழைய சாலைகளை அகழ்ந்தெடுக்காமல் புதிய சாலைப் பணிகளை மேற்கொண்டால் 1913 என்ற புகார் எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பூங்கா பணிகளைப் பார்வையிட்ட இறையன்பு

மேலும் சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு 172இல் அமைக்கப்பட்டுள்ள தொடு உணர்வுப் பூங்காவில் 2.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள், வார்டு 175இல், சென்னை நதிநீர் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் 9.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பூங்கா பணிகளையும் வெ. இறையன்பு, இன்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இதையும் படிங்க:அரசாணை வெளியிட்ட மறுநாளே செயல்படுத்திய முதலமைச்சர்...! என்ன தெரியுமா.?

ABOUT THE AUTHOR

...view details