தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

”இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான்” - ஐபிசிசி ஷாக் ரிப்போர்ட் - பூவுலகின் நண்பர்கள்

ஆர்க்டிக் கடற் பகுதியில் உள்ள பனிப் பாறைகளின் பரப்பு 1979 முதல் 1988 மற்றும் 2010-2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 40% மற்றும் 10% குறைந்ததற்கு மனிதர்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட வெப்பமயமாதலே காரணம் என ஐபிசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ipcc reports normalcy amidst disasters
ipcc reports normalcy amidst disasters

By

Published : Aug 9, 2021, 11:22 PM IST

சென்னை: ஐ.பி.சி.சி.,யின் ஆறாவது மதிப்பீட்டு காலத்தின் முதல் பணிக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. இதுகுறித்த முழுதகவல் அடங்கிய அறிக்கையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில், "கடந்த ஜூலை மாதம் உலகின் அனைத்து பிராந்தியங்களும் வெள்ளம், வறட்சி, புயல், நிலச்சரிவு, கடல் நீர் மட்ட உயர்வு, கனமழை, காட்டுத்தீ போன்ற ஏதோ ஒரு பேரிடரால் பாதிக்கப்பட்டோ அல்லது பாதிப்பிலிருந்து மீண்டுகொண்டோ இருந்தது. இவையெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பவைதானே இதில் புதிதாக ஏதுமில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை காலநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வரும் எந்த அறிவியலாளராலும் கணித்திருக்க முடியவில்லை.

அறிவியலாளர்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த பேரிடர்களை முன்கூட்டியே கணித்து விடும் அறிவியல் தொழில்நுட்பங்களால் கூட இந்த வெள்ள பாதிப்பை கணித்திருக்க முடியவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் காலநிலையில் குறிப்பிட்ட அளவு மாற்றம் நிகழும் என ஏற்கெனவே நாம் கணித்திருந்த பல அளவுகோல்களை சுக்கு நூறாக உடைத்தது ஜூலை மாதத்தில் நடந்த தீவிர காலநிலை நிகழ்வுகள்.

இந்த பின்னணியில்தான் ஐ.பி.சி.சி. அமைப்பு இன்று ஜெனிவாவில் தனது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.பி.சி.சி. தற்போது தனது ஆறாவது மதிப்பீட்டு காலத்தில் உள்ளது. இந்த காலத்தில் அமைப்பின் முதல் பணிக்குழுவின் Climate Change 2021: the Physical Science Basis எனப் பெயரிடப்பட்ட இந்த அறிக்கை காலநிலை மாற்றத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் குறித்தும் மனிதர்களால்தான் காலநிலையில் மாற்றங்கள் உண்டாகின்றன என்பதற்கான ஆதாரங்களையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தி என்பது பாரிஸ் ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தங்களது பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தினாலும் கூட இந்த நூற்றாண்டின் இறுதியில் புவியின் சராசரி வெப்பநிலையானது 3° செல்சியசை தொட்டுவிடும் என்பதே ஆகும். 2014ஆம் ஆண்டு வெளியான ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையில் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள் நடவடிக்கை காரணம் என்று குறிப்பிட்டிருந்தது. இன்று வெளியாகியிருக்கும் அறிக்கையில் 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு வளிமண்டலத்தில் நிறைந்துள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவுக்கு சந்தேகத்திற்கிடமின்றி மனித நடவடிக்கைகள் மட்டுமே காரணம் என்பதை அறிவியலாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்

  • புவியின் மீதான மனிதர்களின் செல்வாக்கு ஏற்கெனவே புவியின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள வானிலை மற்றும் தீவிர காலநிலை நிகழ்வுகளை பாதித்துள்ளது.
  • 2014ஆம் ஆண்டு வெளியான ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கைக்குப் பிறகு வெப்ப அலைகள், கனமழை, வறட்சி, புயல் போன்ற பேரிடர்களின் தீவிரத்திற்கு மனிதர்களின் நடவடிக்கை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
  • பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வானது அதிகமாகவோ, நடுத்தரமாகவோ அல்லது குறைவாகவோ என எந்தப் பாதையில் சென்றாலும் புவி வெப்பமானது 1.5 செல்சியஸ் அல்லது 2 செல்சியஸ் அளவை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் எட்டிவிடும்.
  • உலக வெப்பமயமாதலானது அடுத்த பத்தாண்டுகளுக்குள் 1.5° செல்சியஸ் அளவிற்கு உயர்ந்து விடும் என்றும் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் அளவை, உடனடியாக, வேகமாக, பெரிய அளவிற்கு குறைக்காவிட்டால் 2° செல்சியஸ் அளவைக் கூட தாண்டும் என கூறப்பட்டுள்ளது
  • புவி வெப்பமயமாதலானது நீர் சுழற்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தால் பருவமழைப் பொழிவு மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் அதி தீவிர மழைப்பொழிவும், வறட்சியும் ஏற்படும். சில இடங்களில் இவ்விரு நிகழ்வுகளும் தொடச்சியாகவோ அல்லது ஒரே நேரத்திலோகூட நிகழும். இதனால் பாதிக்கப்படும் மக்கள் அதிலிருந்து மீளவே முடியாத நிலை உண்டாகும்.
  • கார்பன் டை ஆக்ஸ்டு உமிழ்வு அதிகமாகும் பட்சத்தில் நிலமும் கடலும் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கும் திறனை இழக்கும்.
  • பசுமை இல்ல வாயுக்களின் கடந்த கால மற்றும் எதிர்கால உமிழ்வால் கடல், பனிப்பாறைகள், கடல் நீர்மட்ட உயர்வில் ஏற்படும் மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத நிலை உண்டாகும்.
  • 2019ஆம் ஆண்டு வளிமண்டலத்தில் காணப்பட்ட கார்பன் டை ஆக்சைடின் செறிவானது அதற்கு முந்தைய 2 மில்லியன் ஆண்டுகளில் காணப்படாத அளவாகும். மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடின் அளவானது அதற்கு முந்தைய 800,000 ஆண்டுகளில் காணப்படாத அளவாகும்.
  • 1970ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்த உலக சராசரி வெப்பநிலை உயர்வானது அதற்கு முந்தைய 2000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும்.
  • 1900ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்த உலகின் சராசரி கடல் மட்ட உயர்வின் வேகமானது கடந்த 3000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும். 2100ஆம் ஆண்டில் 2மீ அளவிற்கும் 2150ஆம் ஆண்டில் 5மீ அளவிற்கும் உயர வாய்ப்புள்ளது.
  • கடல் வெப்ப அலை நிகழ்வுகளின் எண்ணிக்கையானது 1980ஆம் ஆண்டிற்குப் பிறகு இருமடங்காக அதிகரித்துள்ளது.
  • ஆர்க்டிக் கடற் பகுதியில் உள்ள பனிப் பாறைகளின் பரப்பு 1979 முதல் 1988 மற்றும் 2010-2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 40% மற்றும் 10% குறைந்ததற்கு மனிதர்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட வெப்பமயமாதலே காரணம்.

அறிவியல் ஆதாரங்களுடன் காலநிலை மாற்றத்தின் தற்போதைய நிலை மற்றும் தீவிரத்தை இந்த அறிக்கை நமக்கு எடுத்துரைத்துள்ளது. பாரிஸ் ஒப்பந்ததின் படி உமிழ்வை குறைத்தால் கூட இனி நமது இயல்பு வாழ்க்கையானது பேரிடர்களுக்கு நடுவில்தான் அமையும் என்பதே இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தியாகும். தற்போது இருக்கும் உமிழ்வு அளவை குறைப்பதோடு மட்டுமில்லாமல் மிக வேகமாக நம் வாழ்விடங்களை பேரிடர்களில் இருந்து தப்பிக்கும் வகையில் தகவமைத்துக் கொள்ள நாம் முயல வேண்டும். இனி நாம் வெளியிடும் ஒவ்வொரு சிறு உமிழ்வும் இப்புவியின் எதிர்காலத்தை சீரழிக்கும் என்பதை அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில் திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டிய இந்திய அரசோ, தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டங்களையும், அனல்மின் நிலையங்களையும், நிலக்கரி மற்றும் யுரேனிய சுரங்கங்களையும் திறப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இது போன்ற திட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களையும் திருத்தி அமைத்து நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் வேகமாக ஈடுபட்டு வருகிறது. அறிவியல் நம் இருத்தியலின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கையை கொடுத்து விட்டது. அதற்கு செவிமடுத்து செயல்பட வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது.

அண்மையில் MSSRF அமைப்பின் ஆண்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காலநிலை மாற்றத்தை இந்த அரசு மானுட குலத்திற்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்சனையாக கருதுவதாக தெரிவித்திருந்தார். மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய உரையாக அது அமைந்தது. அந்த வகையில் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்தவும் தகவமைத்துக் கொள்ளவும் நமது மாநிலத்திற்கென சிறப்பான காலநிலை மாற்ற செயல் திட்டம் ஒன்றையும் சட்டம் ஒன்றையும் உருவாக்க வேண்டும். மாவட்ட அளவில் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டம் மற்றும் மையங்களை அமைக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details