தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை இந்திய அளவில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களான எல்காட் நிறுவனம் சென்னையில் சோழிங்கநல்லூர், திருச்சியில் நவல்பட்டு உள்ளிட்ட எட்டு இடங்களில் அமைத்துள்ளன. இதில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் (ஐடி) இயங்க தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், சாலைகள், சுற்றுப்புற சுவர் ஆகியவற்றை உருவாக்கி அந்த நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் விப்ரோ, எச்.சி.எல்., சத்யம், காக்னிசன்ட் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் சேவை சார்ந்த நிறுவனங்களின் முதலீடு 2018 -19ஆம் ஆண்டில் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் ரூ.33 ஆயிரத்து 627 கோடி முதலீடு மட்டுமே கிடைத்துள்ளது. இந்த தொகை கடந்த 2017 - 18ஆம் கிடைத்த ரூ. 39ஆயிரத்து 353 கோடியை விட ரூ. 5 ஆயிரத்து 726 கோடி குறைவாகும். 2017 - 18ஆம் ஆண்டு கிடைத்த முதலீடுதான் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கிடைத்த முதலீடுகளில் அதிக அளவாகும். இதில் மிகக் குறைவாகக் கடந்த 2014 -15ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட 23ஆயிரத்து 71 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டது. அதுமுதல் ஏறுமுகத்திலிருந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு தற்போது சரிவைக் கண்டுள்ளது.