சென்னை:கே.கே. நகர் விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (26). இவர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 30 ஆம் தேதி ரவி தனியாக வீட்டிலிருந்தபோது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வருவதாக கூறி ரவியை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ரவியின் மனைவி ஐஸ்வர்யா இந்த தகவலறிந்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது, அப்படி யாரையும் அழைத்து வரவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா தனது கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த 4 ஆம் தேதி கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் தனது வீட்டின் அருகே செம்பியம் காவல் நிலைய காவலரான செந்தில் குமார் அவரது காதலியுடன் வசித்து வந்ததாகவும், செந்தில் குமாருடன் இணைந்து தனது கணவர் ரவி தினமும் மது அருந்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது குழந்தை ஜெசிகா செந்தில் குமாரின் வீட்டருகே சிறுநீர் கழித்ததால், செந்தில் குமாரின் குடும்பத்தோடு பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது தனது கணவர் ரவியை செந்தில் குமார் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் காணாமல்போன அடுத்த நாளே செந்தில் குமார் குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், தனது கணவரை செந்தில் குமார் கடத்தி சென்றிருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் காவல் ஆணையரிடம் ரவியின் மனைவி புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வைத்து 'Missing' என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, காவலர் செந்தில் குமார் வீட்டில் விசேஷம் எனக்கூறி கடந்த 28 ஆம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கே.கே. நகர் போலீசார் தனிப்படை அமைத்து காணாமல்போன இருவரது செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தியதில், கடைசியாக செங்கல்பட்டு பழமத்தூர் கிராமத்தின் காட்டுப்பகுதியில் செந்தில் குமாரின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்ததால் தனிப்படை அங்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக படாளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் அந்த சடலத்தை மீட்டு கொலை வழக்குப்பதிவு செய்தனர். அந்த சடலம் காணாமல்போன ரவியின் உடல் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செல்போன் எண்ணை வைத்து செந்தில் குமாரின் காதலி கவிதாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, 30 ஆம் தேதி அதிகாலை ரவி வீட்டில் தனியாக இருந்தபோது செந்தில் குமார் அவரது நண்பர்களான ஐசக், எட்வின் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் புகுந்து ரவியை சரமாரியாக தாக்கி மயக்கமடைய வைத்து, செங்கல்பட்டு காட்டுப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி ரவியை எரித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தலைமறைவான செந்தில் குமார், ஐசக், எட்வின் உட்பட 5 பேரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காவலர் செந்தில் குமார் சொந்த ஊரான சேலத்திலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:செங்கல்பட்டில் எரிந்த நிலையில் கிடைத்த ஆண் சடலம் - தீவிரமடையும் விசாரணை