மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்றார் பாரதி. சங்க காலத்திற்கு முன்பிருந்தே பெண்கள் பலர் சாதித்து வருகின்றனர். அதற்கான சான்று நாம் கண்ட பெண்பாற் புலவர்களும் ஆட்சி அமைத்த அசாத்திய பெண்களும். ஆனால் நம் சமூகத்தில் எழுந்த பிற்போக்குத்தனமான சிந்தனைகள் அவர்களின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும் ஆங்காங்கு வீறு கொண்டு எழுந்த புரட்சிப்பெண்கள் அந்த சிந்தனைகளை தகர்த்தனர்.
இருப்பினும் தற்போதைய காலகட்டத்திலும் அது தொடர்கிறது. தற்போது பெண்கள் சாதிக்கிறார்கள் என்றால் அது அவ்வளவு எளிதானது கிடையாது. "ஒரு பெண் கல்வி பெறுகிறாள் என்றாள் அது நாட்டிற்கே பெருமை" என்று பேசி பொழுதை கழித்த பலர், அவர்களை ஏசுவதிலும் முந்திக்கொள்வர். இந்த ஏசுதலுக்கும் பேசுதலுக்கும் இடம் கொடுக்காமல் தான் கொண்ட லட்சியத்தை அடைந்தவர்தான் காவல் துறை துணை தலைவர் பவானீஸ்வரி. தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் இவர் 25 வருட அனுபவம் கொண்டவர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட காணொலியில் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் பேசிய அவர், "தான் காவல்துறையில் சேர்ந்த காலகட்டத்தில் இந்தத் துறை ஆணாதிக்கம் நிறைந்த துறையாகதான் கருதப்பட்டது. ஆனால் தற்போது அப்படி நினைத்தவர்களின் விழுக்காடு குறைந்துள்ளது. எனக்கு மிகவும் துணையாக இருந்தது எனது குடும்பம்" என்றார்.