சென்னை:கடந்த 2020ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவல் தெரிவித்ததாகவும், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காகவும் பாஜக நிர்வாகி எஸ்.வி. சேகருக்கு எதிராக ராஜரத்தினம் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் எஸ்.வி. சேகருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பான குற்றப்பத்திரிகை, சென்னை நாடாளுமன்றம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
எஸ்.வி. சேகரின் விளக்கம்
அதில், “எம்ஜிஆர் சிலைக்கு காவி சால்வை போர்த்திய செயலை களங்கம் எனத் தெரிவித்த முதலமைச்சர், களங்கமான தேசியக் கொடியை தான் ஏற்றப் போகிறாரா? என கேள்வி தான் எழுப்பினேன். தேசியக் கொடியை அவமதிக்கவில்லை.
சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், நாடாளுமன்றம், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், எஸ்.வி. சேகர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:முந்திரி ஆலை கொலை வழக்கு: தலைமறைவான திமுக எம்பி