செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் செங்காடு மற்றும் இள்ளளூர் கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மனுக்கும், குமார் என்பவருக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக இதயவர்மன் கைது செய்யப்பட்டார். பின் அவருக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.
இந்நிலையில், 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது இதயவர்மனுக்கு பணம் கொடுத்து உதவாததால், கோவில் நிலத்தை தான் ஆக்கிரமிக்கவுள்ளதாக பொதுமக்களிடையே அவதூறு பரப்பி, தனது நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்த இதயவர்மன் ஆட்கள், நிலத்தை சேதப்படுத்தியது தொடர்பாக குமார் புகாரளித்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு, திருப்போரூர் தாசில்தார் பரிந்துரைத்ததை எதிர்த்து குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ” விசாரணையில் சம்பந்தப்பட்ட இடம் ஆக்கிரமிப்பும் அல்ல, கோவிலுக்கு சொந்தமான இடமும் அல்ல என தெரிய வந்த போதும், இதில் முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் இருந்தும் இதயவர்மனின் அரசியல் செல்வாக்கால் பொறுப்பை தட்டி கழிக்கும் விதமாக செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரைத்த திருப்போரூர் தாசில்தாரின் உத்தரவை ரத்து செய்து, தாசில்தாரே விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனவும், இதயவர்மனோ அவரது ஆட்களோ தன்னுடைய நிலத்திற்கு சென்று வர இடையூறு ஏற்படுத்தக் கூடாது “ என உத்தரவிடுமாறும் கோரியுள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்த தாசில்தாரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இந்த நில விவகாரத்தில் தலையிடக் கூடாது என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், திருப்போரூர் தாசில்தார், இதயவர்மன் அவரது தந்தை லட்சுமிபதி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்' - பொன்.ராதாகிருஷ்ணன்