இது தொடர்பாக அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அண்ணாவினால் 1967ஆம் ஆண்டில் தொடங்கப்ட்ட ’கலப்புத் திருமணங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்’ பல்வேறு காலங்களில் அனைத்து அரசுகளாலும் மேம்படுத்தப்பட்டது. தற்போது கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில் அவர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் வழங்கப்படும் நிதியுதவி 60 ஆயிரம் ரூபாயும், தாலிக்கு எட்டு கிராம் (22 கேரட்) தங்கமும் வழங்கப்படும் என்றும் திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுகவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது என்பதை அறிந்த மாற்று அணியினர் பல்வேறு பொய்ப் பரப்பரைகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒரு பெண்மணி, திமுக தனது தேர்தல் அறிக்கையில் சில குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை கலப்புத் திருமணம் செய்தால் நிதியுதவி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளதாகக் கூறி பொய் பரப்புரை செய்து வந்தார். அந்தக் காணொலியை சமூக வலைதளங்களில் பரப்பியும் வந்தனர்.