சென்னை மணலியில் சுங்கத் துறை கட்டுப்பாட்டின் கீழ், 37 கன்டெய்னர்களில் 690 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனை சென்னை வடக்கு மண்டல இணை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வெடிபொருள் துறையின் துணை தலைமைக் கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன், "அம்மோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக வைப்பது குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது" எனத் தெரிவித்தார். அதையடுத்து சுந்தரேசன் கூறுகையில், "இங்கு வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் உரிமை குறித்து 5 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்ததால் அவைப் பாதுகாக்கப்பட்டு வந்தது.
வெடிபொருள் துறை அலுவலர் சுந்தரேசன் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு நிறைவு பெற்றதையடுத்து, அவற்றை அகற்றும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் பட வேண்டாம். அப்புறப்படுத்தும் பணியில் சுங்கத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்த தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு மணலிக்குச் சென்று ஆய்வு செய்தார். அவருடன் சுங்கத்துறை, காவல் துறையினர் இருந்தனர். முன்னதாக சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் இருந்துள்ள நிலையில், 2015ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கில், 50 டன் அடித்துச் செல்லப்பட்டது என சுங்கத்துறை உயர் அலுவலர்கள் இன்று காலை (ஆகஸ்ட் 7) தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சென்னையிலுள்ள 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் அகற்றம் எப்போது? சுங்க இணை இயக்குனர் பதில்!