சென்னை: ராயபுரம் தங்க சாலை பகுதியில் 11ஆவது மெகா தடுப்பூசி முகாமினை மா. சுப்பிரமணியன் ஆய்வுமேற்கொண்டார். அங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மா. சுப்பிரமணியனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் மா. சுப்பிரமணியன் பேசுகையில், ”மெகா தடுப்பூசி முகாம் மூலம் சென்னையில் இன்று இரண்டு லட்சம் பேருக்குத் தடுப்பூசியைச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
72 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த கால அவகாசம் முடிந்து காத்திருக்கின்றனர். இரண்டாவது, முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
மேலும், “60 நாள்களாக கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில் நேற்று கரோனா தொற்று உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதே கரோனா தொற்று உயர்வுக்கு காரணம். எனவே தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்” என வலியுறுத்தினார்.
”கடந்த ஏழு நாள்களில் சிங்கப்பூரில் 14 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏழு நாள்களில் இங்கிலாந்தில் 75 விழுக்காட்டினர் தடுப்பூசியைச் செலுத்தியுள்ளனர். ஆனால் 2.84 லட்சம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 1,029 பேர் உயிரிழந்துள்ளனர்.