வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகங்களில், பதிவு ஆவணங்களைப் பராமரிப்பதற்கும், பணியாளர்கள் திறம்படப் பணியாற்றுவதற்கும், போதிய இடவசதி இல்லாததை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்ற சார் பதிவாளர் அலுவலகங்களில் தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருதியும், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சொந்த கட்டடங்கள் கட்டும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மத்திய சென்னை பதிவு மாவட்டம், நொளம்பூரில் 6,326.88 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இப்புதிய அலுவலக வளாகக் கட்டடத்தில் , அண்ணா நகர், அசோக் நகர், வில்லிவாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய நான்கு சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். இக்கட்டடம் வாகன நிறுத்துமிடம் , மின்னணு முத்திரைத்தாள் அலுவலகம், பொதுமக்களுக்கான காத்திருப்பு அறை , மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள நடைபாதை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.