சென்னை:சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக, இளைஞர் ஒருவர் மீது வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
புகாரின் பேரில் வேப்பேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் காதலிப்பதாகப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த முகமது சையத்(26) என்பதும், இவர் பி.காம் படித்துவிட்டு மாடலிங், டிவி சீரியல்களில் துணை நடிகராகவும் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வருவதும் தெரியவந்தது.
மேலும் இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முகமது சையத் மாடலிங் மற்றும் போட்டோ ஷூட் துறையிலிருந்து வருவதும், ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போட்டோ ஷுட்டில் எடுக்கக்கூடிய புகைப்படங்களை முகமது சையத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் இனிப்பாகப் பேசி இம்சை செய்த கொடுமை
குறிப்பாக 6 பேக் உடலமைப்பு கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் முகமது சையத், பதிவிட்டு வந்ததாகவும், அந்த புகைப்படங்களைப் பார்த்த மாடலிங் பெண்கள் பலர் முகமது சையத்திடம் பேசி வந்துள்ளனர். முகமது சையத் தன்னை ஒரு பணக்காரரைப் போல் பாவித்துக் காட்டி, இளம்பெண்களிடம் காதலிப்பதாகக் கூறி, தனது காரில் ஈ.சி.ஆர் போன்ற பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.