இளைஞருக்குத் துன்புறுத்தல்: விரிவான அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு - Innocente attacked by police
சென்னை: கொலை வழக்கை ஒப்புக்கொள்ளும்படி இளைஞரை அடித்து சித்ரவதை செய்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல்செய்ய தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் வசித்துவந்த தென்காசியைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞரை, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தினர், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, கொலை வழக்கை ஒப்புக்கொள்ளக் கூறி, அடித்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த கண்ணன், கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் கண்காணிப்பாளருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுசம்பந்தமாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல்செய்ய, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.