சென்னை: சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் வீ. முருகேஷ் என்பவர், பசுமை வழிச்சாலை கேசவபெருமாள் பிரதான சாலையை சீரமைக்க கோரி, கடந்த அதிமுக ஆட்சியின்போது 2017 டிசம்பர் 6ஆம் தேதி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த நடுவம், சாலையை சீரமைக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இதுதொடர்பான தகவலை கேட்டு, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் முருகேஷ் அளித்த மனுவுக்கு பொது தகவல் அலுவலர் பதிலளிக்காததால், இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திலும் புகார் கொடுத்தார்.
மாதம் ரூ.1000 வீதம் இழப்பீடு
இந்த புகாரை விசாரித்த மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ், புகார் அளித்த நாளில் இருந்து, 2021 வரை 27 மாதங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 27 ஆயிரம் ரூபாய் மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க, அடையாறு மண்டல அலுவலரான தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மேலும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், தமிழ்நாடு அமைச்சர்களின் குடியிருப்புகள், அரசு இல்லங்கள் உள்ள முக்கியமான இந்த சாலை முறையாக அமைக்கப்படாததால் தண்ணீர் தேங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி, சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் சாலைகள், மழைநீர் சேகரிப்பு, மழைநீர் வடிகால் கால்வாய்களை ஓய்வுபெற்ற ராணுவ பொறியாளர்களை கொண்டு ஆய்வுசெய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை
முறையாக அமைக்கப்படாத சாலைகளை, ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், சொந்த செலவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அந்த பணிகள் ராணுவ பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, அமைக்கப்பட்ட சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை என்றால் சரியாக அமைக்கப்பட்டுள்ளதாக தவறான சான்றிதழ் அளித்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தடையை மீறி ஆர்ப்பாட்டம்; எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு!