தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாடிக்கையாளர்கள் பல்வேறு வங்கிகளின் திட்டங்களை ஒப்பிட்டு கடன் பெறலாம்! - bank loan awareness

சென்னை: வாடிக்கையாளர்கள் பல்வேறு வங்கிகளில் வழங்கப்படும் கடன் திட்டங்கள், வட்டி விகிதங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு தங்களுக்கு ஏற்ற கடன் திட்டங்களை தேர்ந்தெடுக்கும் வகையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ”வாடிக்கையாளர்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி” தி.நகரில் நடைபெற்றது.

Chennai Bank Mela

By

Published : Oct 5, 2019, 12:41 AM IST

இந்த நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, ஐசிஐசிஐ வங்கி, கத்தோலிக்க சிரியன் வங்கி, யெஸ் வங்கி உள்ளிட்ட ஏராளமான தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் கலந்துகொண்டு வாடிக்கையாளர்களுக்கு தங்களது கடன் திட்டங்கள் குறித்து விளக்கும் ஸ்டால்களை அமைத்திருந்தன.

வங்கிகள் தவிர வீட்டுக் கடன் நிறுவனங்கள், சிறு, குறு நிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் முதலியவைகளும் முதல் முறையாக வங்கிகளுடன் இணைந்து தங்களது திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தன. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறு, குறு நிறுவனக் கடன்கள், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடன்கள் குறித்த தகவல்களையும் இங்கு பெற முடியும்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேட்டி

பல்வேறு வங்கிகளின் முக்கிய அலுவலர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கடன் ஒப்புதல் ஆவணங்கள், கடன்களுக்கான காசோலை ஆகியவற்றை வழங்கின. இது தொடர்பாக பேசிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணை பொது மேலாளரும், தமிழ்நாடு அளவிலான வங்கியாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான சுஷில் சந்திர மோஹன்தா, "நாடு முழுவதும் மக்களின் வளர்ச்சிக்கான கடன் சேவையை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதனை ஒருங்கிணைத்துள்ளது. வெறும் விளம்பர நிகழ்ச்சியாக இல்லாமல் மக்களுக்கு நிதி சேவையை வழங்க நாங்கள் இருக்கிறோம் என்று கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, வாடிக்கையாளர்கள் பல்வேறு வங்கிகளில் வழங்கப்படும் கடன் திட்டங்கள், வட்டி விகிதங்களை ஒப்பிட்டு தங்களுக்கு ஏற்ற கடன் திட்டங்களை தேர்ந்தெடுக்க முடியும். நாளை வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சி மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:

ரெப்போ வட்டி 0.25 விழுக்காடு குறைப்பு! - ஒரே ஆண்டில் இது 5ஆவது முறை

ABOUT THE AUTHOR

...view details