தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் டெல்லி கலவரத்தைக் கண்டித்தும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று கூறினார். மேலும், டெல்லி கலவரத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லை என்றும் பேசியிருந்தார்.
இந்தச்சூழலில் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர், ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அபுபக்கர், ரஜினிகாந்திடம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.