இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் "குடிசை பகுதி மக்களை மறு குடியமர்வு" செய்வது தொடர்பான புதிய கொள்கையை அறிவிப்போம் என தெரிவித்திருந்த அடிப்படையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் அரசின் புதிய வரைவு கொள்கையை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அறிக்கை வெளியிட்ட 15 தினங்களுக்குள் (அதாவது அக்டோபர் 27க்கு முன்பு) கருத்துக்களை இணையவழியில் தெரிவிக்க கூறப்பட்டுள்ளது.அரசின் நிதிநிலை அறிக்கையில் உறுதியளித்தது போல குடிசைப்பகுதி மக்களை மறுகுடியமர்வு செய்வதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டதும், மக்களிடம் கருத்து கேட்க முன்வந்ததும் பாராட்டத்தக்கது. அறிக்கையின் உள்ளடக்கம் குறித்தும், அரசின் மறுகுடியமர்வு திட்டம், அதை அதிவேகப்படுத்துவதற்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எடுக்கும் முயற்சிகள் குறித்து பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும் ஆலோசனைகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.
ஆனால், வாழ்விட உரிமை சார்ந்த, மக்கள் மத்தியிலிருந்து ஆலோசனை பெறவேண்டிய, முக்கியமான செயல்பாட்டில், வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் கொள்கை சார்ந்த செயல்பாடுகளில் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக அரசின் திட்டத்தோடு சம்பந்தபட்ட மக்களும், கருத்து சொல்வதற்கு ஏற்ற வழிவகையை உருவாக்க வேண்டியது அரசின் அடிப்படை கடமை.
எனவே, தமிழ்நாடு அரசு "குடிசை பகுதி மக்களை மறுகுடியமர்வு" வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். தமிழில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுபோல மக்களின் கருத்துக்களை தெரிவிக்க உரிய காலம் வழங்குவதும் அவசியம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு கேட்டுக் கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நீட் தேர்வு விலக்கு: ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி!