இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினேன். அப்போது ஒரு முக்கியமான பிரச்னை குறித்து விவாதித்தோம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து, தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசித்தோம்.
குடியுரிமை திருத்தச் சட்டம் வேறு சில நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது என்பதை பிரதமர், உள்துறை அமைச்சர் உணர வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகளால் கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. ஏழை, பட்டியலின மக்களுக்கும் எதிரானது.
ஆர்.எஸ்.எஸ்-இன் உள்நோக்க கருத்தியல் படி, இந்தியாவை மத அடிப்படை ஆட்சியாக மாற்ற முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அரசியலமைப்பு சட்டம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. அமித்ஷா எவ்வளவு போராட்டம் நடந்தாலும் குடியுரிமைச் சட்டம் திரும்ப பெறப்படாது என்கிறார். இது சர்வாதிகாரத்தின் குரல். இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
இந்திய பொருளாதாரம் ஆழமான நெருக்கடியில் உள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள் நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக உள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை 2020, பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்குமா அல்லது பாடுபடும் மக்களுக்காக இருக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பெரியார் சமூக நீதிக்காகப் போராடியவர். சாதிய விடுதலைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் எவருக்கும் அஞ்சாமல் துணிவோடு போராடியவர். அப்படிப்பட்டவரைப் பற்றி யார் கருத்து சொன்னாலும் சர்ச்சையை தவிர்க்க வேண்டும். பெரியார் குறித்து சர்ச்சையாக பேசுவது உலக அரங்கில் எடுபடாது “ என்றார். இச்சந்திப்பின் போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் உடனிருந்தனர்.
பெரியார் குறித்து சர்ச்சையாக பேசுவதை தவிருங்கள் இதையும் படிங்க: 'நாட்டில் பல பிரச்னைகள் இருக்கு, ரஜினி பிரச்னையைப் பத்தி மேலும் பேசாதீங்க' - கடுப்பான திருநாவுக்கரசர்