சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "காஷ்மீரில் ஏற்பட்டிருக்கக் கூடிய நிலைமை கற்பனை செய்ய முடியாத விபரீதத்தில் இந்தியாவை சிக்கவைக்கும் என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. காஷ்மீர் பிரச்னையை தீர்க்க, அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் நேற்று மீண்டும் கூறியிருந்தார். ஐநா மனித உரிமை ஆணையத்தில் காஷ்மீர் பிரச்னை எடுத்துக்கொள்ளப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம்" என்று தெரிவித்தார்.
அமர்நாத் யாத்திரைக்கு தடை விதித்ததோடு சுற்றுலாப் பயணிகளும் வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய வைகோ, அங்கு அதிகளவு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அப்படியானால் காஷ்மீர் மக்கள் எங்கே போவார்கள் என்றும், அரசியல் சட்டத்தில் 35ஆவது பிரிவை மத்திய அரசு நீக்க முயற்சி செய்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.