சென்னை:சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான பிரத்யேக ட்ரோன் தொழில்நுட்பத்தை எம்ஜிஎம் மருத்துவமனை சார்பில் புதிய தொழில்நுட்பம் இன்று அறிமுகப்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலமாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் மற்றும் நேரடியாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டு தொடங்கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி,
இந்தியா சுகாதாரத்துறையில் அடுத்த மைல்கல்:”எம்ஜிஎம் மருத்துவமனை 500 இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்த சாதனை அவர்களுக்கு மட்டும் இல்லாமல் இந்தியாவை உலக அளவிற்கு கொண்டு சேரும். அவர்கள் இந்த சாதனையோடு நிறுத்திக் கொள்ளாமல் அடுத்தடுத்து சாதனைகளை செய்ய வேண்டும்.
உலக அளவில் தரமான மருத்துவ வசதி தர வேண்டும் என்றால் கிராமப்புற இடங்களில் மருத்துவத்தை கொண்டு செல்ல வேண்டும். நகரங்கள், சிறிய நகரங்கள், கிராமங்களுக்கும் உலகத்தர மருத்துவ சிகிச்சையை கொண்டு செல்வதன் மூலம் இந்தியா சுகாதாரத்துறையில் அடுத்த மைல்கல்லை எட்டும்.
உடல் உறுப்பு தானம் செய்வதில் அரசும் தனியாரும் தற்போது எவ்வாறு உள்ளதோ அதே நிலை தொடர வேண்டும். உடல் உறுப்பு தானம் செய்த பிறகு அதை மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்வதில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சிறப்பான போக்குவரத்து இணைப்பு இருந்தால் அதனை சரி செய்து விடலாம்.
எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை: முக்கிய நகரங்களுக்கான பயண நேரத்தை குறைக்க விரைவுச்சாலைகள் அவசியம் ; அதை குறைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பாரத் மாதா போர்ஜனா திட்டத்தில் சாலை போக்குவரத்து உள்கட்டமைப்பு சிறப்பாக மாற்றப்பட்டு உள்ளது. கோல்டன் கார்டலெட்டரல் பெரிஃபெரல் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை (Golden cordaleteral peripheral express) மாநிலம் மற்றும் நகரங்களுக்கு இடையே உறுப்புகளை மாற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சு இந்த சாலை மூலம் டெல்லியில் இருந்து டேராடுனுக்கு இரண்டு மணி நேரத்திலும், டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு இரண்டு மணி நேரத்திலும், சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்திலும் சென்று விடலாம்.
சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை, சென்னையில் இருந்து கர்நாடகாவிற்கு உடல் உறுப்பைக்கொண்டு செல்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் சில நேரங்களில் ஆந்திர பிரதேச பகுதிக்குக் கொண்டு செல்வதற்கும் உதவியாக இருக்கும்.
தற்போது ட்ரோன் மூலமாக உடல் உறுப்பைக் கொண்டு செல்வதற்கு முடிவு செய்துள்ளனர். இது ஒரு புதுமையான யோசனை. இந்த ஆராய்ச்சிக்கு MGM மருத்துவமனை மிகவும் உதவியாக இருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சியைத்தருகிறது.
வெளிநாட்டிலிருந்து பல்வேறு நபர்கள் இங்கே சிகிச்சைக்காக வருகின்றனர். இதன் மூலம் போக்குவரத்து கட்டமைப்பு வளரும். இது ஒரு பக்கம் இருந்தாலும் மக்களிடையே உடல் உறுப்பு தானம் செய்வதற்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ட்ரோன் தொழில்நுட்பம் அவசியம்: தொடந்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப பல வசதிகளை பயன்படுத்தியதால் தான் தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. உடல் உறுப்புகளை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏதுவாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம். பேரிடர் காலத்தில் இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறைந்திருந்தது. ஆனால், ஏர் ஆம்புலன்ஸ் சேவை உட்பட பல சேவையில் MGM மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 796 அரசு மருத்துவமனைகள், 937 தனியார் மருத்துவமனைகள் என்று 1,733 மருத்துவமனைகள் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழ்நாட்டில், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
MGM மருத்துவமனையில் மட்டும் 1,000 பேர் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. தொடர்ந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி & மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. வரும் காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை செலவுத் தொகை, தாமதமின்றி விடுவிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில், அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும்”, எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பதிவுத்துறை மென்பொருளில் புதிய அப்டேட்