தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

4 மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு: 8 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவு

சென்னை: இலங்கைக் கடற்படைத் தாக்குதலால் உயிரிழந்த, ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரின் குடும்பங்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்குவது குறித்து எட்டு வாரங்களில் பரிசீலிக்க மத்திய - மாநில அரசுகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பலியான 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு
பலியான 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு

By

Published : Mar 22, 2021, 10:18 PM IST

ஜனவரி 18ஆம் தேதி கச்சத்தீவு பகுதியில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மெசைய்யா, நாகராஜ், சாம், செந்தில் குமார் ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர், மீன்பிடி படகு மீது மோதி, படகை கடலில் மூழ்கடித்ததாகவும், இதில் உயிரிழந்த நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரி, மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, கோரிக்கை குறித்து புதிய விண்ணப்பம் அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

அந்தப் புதிய விண்ணப்பத்தை பரிசீலித்து நால்வரின் மரணத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து, எட்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென மத்திய - மாநில அரசுகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையைப் பரிசீலித்து, மத்திய அரசோ அல்லது மாநில அரசோ பணி வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து, புலன் விசாரணையை விரைந்து முடித்து, மரணத்திற்கான காரணத்தை அவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டுமென காவல் துறைக்கு உத்தரவிட்டு, பீட்டர் ராயன் வழக்கை முடித்துவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details