தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு - அதிமுகவினர் திரண்டு கண்டன முழக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மூத்த மகள் கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், அவரிடம் கவச உடையணித்து சென்று, லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

By

Published : Oct 18, 2021, 4:16 PM IST

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்துகுவிப்பில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புதுறை காவல் துறையினர் முன்னாள் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குபதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 150க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர், காலை 7 மணி முதல் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னையில் கீழ்பாக்கம், தி.நகர், பெசன்ட் நகர், நந்தனம், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம் என 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கீழ்பாக்கம் ரெம்ஸ் தெருவில் உள்ள வீட்டில் டி.எஸ்.பி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக விஜயபாஸ்கரின் மூத்த மகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி இருப்பதால், கவச உடையுடன் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கீழ்பாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டருகே முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி, தங்கமணி மற்றும் அதிமுகவினர் திரண்டர்.

சட்டப்பேரவை உறுப்பினர் விஜயபாஸ்கர் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள்

மேலும், அதிமுக மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் ஒன்று கூடி திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே குட்கா வழக்கு, பணப்பட்டுவாடா புகார் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுவது, அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:த(க)ண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்: கரோனாவுக்குப் பின் பேரிடி!

ABOUT THE AUTHOR

...view details