தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'செல்போன் நிறுவனங்களில் ரூ.12,292 கோடி அளவில் முறைகேடு!' - வருமான வரித்துறை சோதனை

செல்போன், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.12,292 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

Raid
Raid

By

Published : Jan 1, 2022, 9:49 AM IST

நாடு முழுவதும் வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டிலுள்ள செல்போன், செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், அந்நிறுவன உரிமையாளர்களின் வீடு, அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் டிசம்பர் 21ஆம் தேதிமுதல் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிறுவனங்கள் மூலம் பல்வேறு வகையிலான வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனையானது நடைபெறுவதாக வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக கர்நாடகா, தமிழ்நாடு, அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, பிகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் சியோமி (Xiaomi), ஓப்போ (Oppo) ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் வெளிநாட்டில் உள்ள தங்கள் குழும நிறுவனங்களுக்கு உரிமத்தொகை அடிப்படையில் ரூ.5,500 கோடிக்கு மேல் முறையான ஆவணங்கள் இல்லாமல் பணத்தை அனுப்பியுள்ளது வருமான வரித் துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லை

மேலும், இந்நிறுவனங்கள் செல்போன் உதிரிபாகங்களை வாங்கி செல்போன் தயாரிப்பதாகக் கூறிக்கொண்டு அதற்குண்டான வருமான வரிச் சட்டத்தை முறையாகப் பின்பற்றாமலும், சரியான வரியைச் செலுத்தாமலும் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் உள்ள அதன் குழும நிறுவனங்களுக்கு 5,000 கோடி ரூபாய் அளவிற்குப் பணத்தைக் கடனாகப் பெற்று அதற்குண்டான உரிய ஆவணங்களைப் பராமரிக்காமலிருந்து வந்ததும் சோதனையில் தெரியவந்துள்ளதாக வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,400 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு

அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து இந்தியாவிலுள்ள அதன் தொடர்புடைய குழும நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன், அதற்கான வட்டி தொகைக்கு, முறையான வரி செலுத்தாமல் சுமார் 1,400 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு TDS வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தது சோதனையில் அம்பலமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் பெயரளவில் மட்டுமே நிறுவனங்களைத் தொடங்கி அதன் இயக்குநர்களாக இந்தியர்களைப் பணியமர்த்தி ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் வெளிநாட்டிலிருந்து சியோமி, ஓப்போ போன்ற நிறுவனங்கள் இயக்கிவந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிறுவனங்களை உருவாக்கி சுமார் 42 கோடி ரூபாய் அளவிற்கு இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு முறையான வரி செலுத்தாமல் உதிரி பாகங்களை அனுப்பியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் சோதனை

தமிழ்நாட்டிலும் 30 இடங்களில் வருமான வரித் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தங்களுக்குத் தொடர்பே இல்லாத மென்பொருள் போன்ற நிறுவனங்களுக்கு சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு நிதி அனுப்பியதுபோல் பொய்யாகக் கணக்குக் காட்டி இருப்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இச்சோதனையின் மூலம் இந்நிறுவனங்கள், வரி ஏய்ப்பு மூலமாகவும், பொய் கணக்குகள் மூலமாகவும் முறையற்ற பணப்பரிவர்த்தனை மூலமாகவும் 12,292 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக வருமான வரித் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் இது தொடர்பாகச் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஆட்சியைப் பிடிக்க வேண்டியதில்லை; எங்களைக் கேட்டுதான் ஆட்சி நடக்கும்'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details