சென்னை: கடந்த 2019 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக வருமான வரித்துறையினர் பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க, 2018ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாடு முழுவதும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதில், 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் தங்கத்தை வருமான வரித்துறையினர் 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
750 கிராம் தங்கம், பணம் என சேர்த்து இரண்டரை கோடி என வருமான வரி துறையினர் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக பினாமி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மூன்று ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பணம், தங்கம் வைத்திருந்தவர்கள், அது தங்களுடையது இல்லை என மறுத்ததாலும், உண்மையான உரிமையாளர்கள் வந்து உரிமை கோரவில்லை என்பதாலும், வருமான வரித்துறையினர் டெல்லியில் உள்ள வருமான வரி தீர்ப்பாயத்தில் இது குறித்து தெரிவித்தனர்.