சென்னை:உலக அளவில் மலேசியாவில் நடந்த இசைப்போட்டியில் இந்திய அணி சார்பாக தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற தமிழ்நாடு புத்தர் ஒளி பன்னாட்டுப்பேரவையினர் 2ஆவது இடம்பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
உலக அளவில் ஆறு மாதங்களாகப் பல்வேறு கட்டங்களாக நடந்த இசைப்போட்டியில் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். இந்த இசைப்போட்டியின் இறுதிப்போட்டியாக மலேசியா நாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த இசைப்போட்டியில் இந்திய அணியின் சார்பில் கலந்துகொண்ட தமிழ்நாடு புத்தர் ஒளி பன்னாட்டுப்பேரவையினர், இரண்டாம் இடம்பிடித்து வெற்றி பெற்றனர்.
இந்த அமைப்பினைச்சேர்ந்த 15 பேர் கலந்துகொண்ட நிலையில், இந்திய அளவில் இவர்களின் ஒரே ஒரு பாடல் மட்டும் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (செப்.21) மலேசியாவிலிருந்து சென்னை வந்தடைந்த புத்தர் ஒளி பன்னாட்டுப்பேரவையிருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அப்பேரவையின் தலைவர் கீதா குமாரி கூறுகையில், 'உலக அளவில் பல்வேறு நிலைகளில் நடைபெற்ற இசைப்போட்டியில், இந்திய அளவில் தாங்கள் பாடிய ஒரே ஒரு பாடல் மட்டும் தேர்வாகியது. இதன்மூலம் மலேசியாவில் நடைபெற்ற போட்டியில், புத்தர் ஒளி பன்னாட்டுப்பேரவை அமைப்பு உலக அளவில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க மொத்தம் 15 நபர்கள் சென்று இருந்த நிலையில், அங்கு சுரேஷ் என்பவர் இப்பாடலைப் பாடினார். நாங்கள் அனைவரும் குழுவாக நடனம் ஆடினோம். உலக அளவில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புத்தர் பிறந்த இடம் நமது இந்தியா என்பதால் எங்களுக்கு மிகவும் வரவேற்பு இருந்தது' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
உலகளவிலான இசைப்போட்டி - 2ஆம் இடம் பிடித்த தமிழ்நாடு புத்தர் ஒளி பன்னாட்டுப்பேரவை இதையும் படிங்க: புத்தர் தான் விநாயகரா?... பௌத்த மரபை பின்பற்றும் சந்திர போஸ் விளக்கம்