சென்னை:கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் அதிக அளவில், பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை அளிப்பதால் இந்தப்படிப்புகள் மீது மாணவர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பாடங்களுடன் படிக்கும்போதே திறன்சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்படுவதால், முன்னணி நிறுவனங்களும் வளாகத்தேர்வினை நடத்தி வேலை வாய்ப்பினை வழங்கி வருகின்றனர். இதனால் சென்னையில் உள்ள ராணிமேரி கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி உள்ளிட்ட அரசுக் கல்லூரியில் சேர்வதற்கு இடம் கிடைக்காமல் மாணவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்வதற்கு (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் கடந்த ஜூன் 22 முதல் ஜூலை 27ஆம் தேதி இரவு 12 மணி வரையிலும் 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்தனர். அதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்திருந்தனர்.
பொதுப்பிரிவு கலந்தாய்வு:இளங்கலைப்படிப்பில் சேர்வதற்கு அதிகப்பட்டசமாக சென்னை மாநிலக் கல்லூரியில், இளங்கலை பாடப்பிரிவில் உள்ள 1,106 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு, 95,000 விண்ணப்பங்கள் வந்தன. ராணிமேரி கல்லூரியில் 55,000 விண்ணப்பங்கள் வந்தன. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவு கலந்தாய்வு தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆக.8) தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு அரசு கல்லூரியிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், கல்லூரியில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். மாணவர்களுக்கான முதல் கட்டகலந்தாய்வு நடைபெற்று முடிந்த பின்னர் காலி இடங்களுக்கு ஏற்ப 2ஆம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
சிறப்புப்பிரிவிற்கான கலந்தாய்வு:ராணி மேரி கல்லூரியின் முதல்வர் உமா மகேஸ்வரி கூறும்போது, ''சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலைப்படிப்பில் முதலாம் ஆண்டில் உள்ள 1,427 இடங்களுக்கு53,255 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முதலில் சிறப்புப்பிரிவிற்கான கலந்தாய்வு 5ஆம் தேதி நடத்தப்பட்டது. 60 மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில், வணிகவியல், வணிகவியல் கார்ப்பரேட்ஷிப் பாடப்பிரிவில் உள்ள இடங்களுக்கும் 10, 11ஆம் தேதி அறிவியல் பிரிவிற்கும், 12, 13ஆம் தேதி கலைப்பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடக்க உள்ளது. வணிகவியல் பாடத்தில் 375 கட்ஆஃப் மதிப்பெண்ணிற்கு மேல் பெற்ற 700 பேருக்கும், வணிகவியல் கார்ப்பரேட்ஷிப் 100 பேருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது. வணிகவியல் பாடப்பிரிவில் சேர்வதற்கு 6,914 விண்ணப்பங்களும்; 2,653 ஆங்கிலப்பிரிவிற்கும்; 3,121 தமிழ்ப்பாடப்பிரிவிற்கும் வந்துள்ளன. கடந்தாண்டு 40,000 விண்ணப்பங்கள் வந்தன.