சென்னை:தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையில் தொற்றின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், கரோனா தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து தமிழ்நாடு அரசு இன்று (மே 18) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தமிழ்நாட்டில் 1,60,466 நபர்களுக்குக் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில், புதிதாக 33,059 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 364 பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது ஒட்டுமொத்தமாக 2,42,929 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக 6,016 நபர்கள் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியக, கோயம்புத்தூரில் 3,071 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,299 நபர்களுக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருவள்ளூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 21,362 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக 85 பேர் கரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். செங்கல்பட்டில் 37 நபர்களும், திருவள்ளூரில் 28 நபர்களும், கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 19 நபர்களும், மதுரையில் 15 நபர்களும், சேலம், திருச்சி மாவட்டங்களில் 16 நபர்களும் தொற்றால் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் புதிதாக 520 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 91 நபர்களுக்கு எந்தவிதமான இணை நோய்களும் இல்லை' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கண்ணீர் அஞ்சலி' - அட்ரஸ் இல்லாத போஸ்டர் உங்களுக்கானதா..?