தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பல்வேறு தேர்வு வழிகாட்டுதல் நடைமுறைகளை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அடையாள அட்டை
அரசுத் பொதுத்தேர்வினை நடத்துவதில் முழுப்பொறுப்பும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களையே சேரும். அதன் அடிப்படையில் அவர்களுக்கான பணிகளையும், பொறுப்பு மற்றும் கடமைகளையும் கூறியுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் தேர்வுப் பணிகளில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இன்றி தேர்வு மையத்தில் யாரும் பணிபுரிதல் கூடாது. அவ்வாறு அடையாள அட்டை இன்றிபணியாளர்கள் பணிபுரிந்தால், சம்பந்தப்பட்ட துறை அலுவலரின் மீது ஒழுங்கு நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.
நடவடிக்கை
தேர்வு நாட்களில் தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் செல்போன் மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் தேர்வறைக்கு எடுத்துச் செல்லுதல் கூடாது. அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்குள் செல்போன் மற்றும் ஏதேனும் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான துறை நடவடிக்கை எடுக்கப்படும்.
துறை அலுவலர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர் ஆகியோரின் மீதும் உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு வளாகத்திற்குள் தேர்வர்கள் எவரும் செல்போன் மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துவர தடைசெய்யப்பட்டுள்ளது.
தடை -விடுமுறை
தேர்வு நடைபெறும் நாட்களில், அப்பள்ளியில் படிக்கும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு காலையில் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.தேர்வுகள் நடைபெறும் காலகட்டத்தில் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகட்டிடத்தில் எவ்விதமான கட்டடப் பணியோ அல்லது மராமத்துப் பணியோ நடைபெறாமல் இருக்க வேண்டும். இதுதொடர்பாக நோட்டீஸ் அறிவிப்பு பலகையில் ஓட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.