முதிர்ச்சியடைந்த கண்புரை நோய், கண் தொற்றுகள், தீவிர உலர் கண்கள் பிரச்சினை, டிஜிட்டல் (எண்ம) பயன்பாட்டின் காரணமாக கண் அழுத்தம், கருவிழி ஒட்டு நிராகரிப்பு ஆகியவற்றால் அவதியுறுகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கையோடு மக்களில் பெரும்பாலான கண் பாதிப்பு நிலைகளின் தீவிரத்தை கோவிட்-19 பெருந்தொற்று அதிகளவில் மோசமாக்கியிருக்கிறது.
இது குறித்து மருத்துவர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் அமர் அகர்வால் கூறுகையில், “2019ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் தனது மருத்துவமனைக்கு வருகைதந்த அனைத்து கண்புரை நோயாளிகளில் 10 விழுக்காட்டிற்கும் குறைவானவர்கள், முதிர்ச்சியடைந்த கண்புரை நிலையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
2020ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த அளவானது, ஐந்து மடங்கு அதிகரித்து 50 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. அதைப்போலவே, டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் அழுத்தத்தினால் உருவாகின்ற உலர்ந்த கண்கள் நோய்களின் எண்ணிக்கையும் அதே கால அளவில் 10 விழுக்காட்டிலிருந்து 30 முதல் 50 விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது.
உரிய காலத்தில் பரிசோதனைக்கு வர பல நோயாளிகள் தயங்கியதன் காரணமாக, பல நோயாளிகளிடம் ஏற்கனவே இருந்த கண்விழி விறைப்பு மோசமாகியிருப்பதைக் கண்டறிந்தோம். கருவிழி ஒட்டு சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளிடம் கருவிழி ஒட்டு நிராகரிப்பு, கண்ணில் உயர்அழுத்தம் போன்ற சிக்கல்களும் காணப்பட்டன.