சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் ஆறாவது நாளான இன்று (ஏப்.13) கால்நடை பராமரிப்புத் துறை, மீன் வளம், மீனவர் நலம் மற்றும் பால்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "பண்ரூட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்புகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதிதாக பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கு 44.28 கோடி தேவைப்படுகிறது. மேலும் 4.5 ஏக்கர் நிலம் தேவை. ஆகையால் நிதி நிலைமைக்கு ஏற்ப புதிதாக பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் 51 அரசு பாலிடெக்னிக், 34 உதவி பெறும் பாலிடெக்னிக், 40 அரசு பாலிடெக்னிக் இணைப்பு கல்லூரி, 406 சுயநிதி பாலிடெக்னிக் என 509 பாலிடெக்னிக் கல்லூரிகள் இருக்கின்றன.