மீனவர்களுக்கு எச்சரிக்கை
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்
நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக் குழுவின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்புப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு சமூக ஊடகங்களில் குடிமக்களின் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாகவும், சமூக வலைதளங்களை, ஆன்லைன் செய்தித் தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது எப்படி என்பது குறித்தும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி - நவ்ஜோத் சிங் சித்து சந்திப்பு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று நேரில் சந்திக்கிறார். அடுத்த ஆண்டு பஞ்சாபில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிய நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.