பேருந்து சேவை தொடக்கம்!
தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது. கூடுதலாக 23 மாவட்டங்களில் இன்று பேருந்து சேவை தொடங்கியது. கரோனா பரவல் குறைந்த 27 மாவட்டங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
ஜவுளிக்கடைகள் திறப்பு
தமிழ்நாட்டில் மேலும் 23 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகை கடைகளை இன்று முதல் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு பாதிப்பு - இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை
தமிழ்நாட்டில் இன்று முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் அறிவித்திருந்தார். நீதிமன்ற ஊழியர்கள் 75 விழுக்காடு பேர் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலையேற்றம் - தொடரும் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்டு, விசிக ஆகிய கட்சிகள் இன்று முதல் 3 நாள்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. இன்றைய நிவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99.49 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 93.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மழை.. மழை..
சென்னை, புதுவை, காரைக்கால், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர்
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கி வரும் ஜூலை 11ஆம் தேதி வரை நடக்கிறது. நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோர் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள நிலையில், இந்த முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.