வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கோரதாண்டவம் ஆடி, புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த புயலால் மழை கொட்டி தீர்த்ததுடன், பலத்த காற்று காரணமாக வாழை மரங்கள், குடிசைவீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இந்த புயல் காரணமாக சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.
தாம்பரம் வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அமைச்சர் பாண்டியராஜன், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். மண்ணிவாக்கம், வரதராஜபுரம் அஷ்டலட்சுமி நகர், ராயப்பா நகர் ஆகிய பகுதிகளில் அடையாறு ஆற்றையும் வெள்ளம் சுழ்ந்த பகுதிகளையும் பார்வையிட்டு வெள்ள நீரை வெளியேற்றும் பணி குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டதால், அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்பது தவறான கருத்து. ஆற்றில் அதன் இயல்பான கொள்ளளவு ஏழரை அடிக்கு தான் தண்ணீர் செல்கிறது. இதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. அதேபோல், 42 கிலோ மீட்டருக்கு அடையாறு ஆற்றின் கரைகள் உயர்த்தப்பட்டு, தடுப்பணைகள் உள்வாங்கி கட்டப்பட்டுள்ளதால் வெள்ள பாதிப்பு ஏற்படாது. இன்னும் சில மணி நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்படும்.