தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போலி சான்றிதழ் பெற்று இயங்கும் பெட்ரோல், இயற்கை எரிவாயு விற்பனையகங்கள் - நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள போலி பெட்ரோல், இயற்கை எரிவாயு விற்பனை நிலையங்கள் மட்டுமல்லாமல், போலி தடையில்லா சான்றிதழ்கள் கொண்டு செயல்படும் மதுபான பார்களையும் கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

illegal gas and petrol filling station
illegal gas and petrol filling station

By

Published : Oct 1, 2020, 4:36 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் போலிச் சான்றிதழ்கள் மூலம் 91 பெட்ரோல், இயற்கை எரிவாயு விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பெட்ரோல், கியாஸ் விற்பனை நிலையங்களை தொடங்க முன்னாள் காவல் துறை இயக்குநர் பெயரில் போலியாக தடையில்லா சான்றிதழ் தயாரித்து மோசடி செய்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து சிவக்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் போலிச் சான்றிதழ் மூலம் எத்தனை பெட்ரோல், இயற்கை எரிவாயு விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு காவல் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் மாநிலம் முழுவதும் போலி சான்றிதழ்கள் மூலம் 91 பெட்ரோல், இயற்கை எரிவாயு விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த 91 விற்பனை நிலையங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள போலி பெட்ரோல், இயற்கை எரிவாயு விற்பனை நிலையங்கள் மட்டுமல்லாமல், போலி தடையில்லா சான்றிதழ்கள் கொண்டு செயல்படும் மதுபான பார்களையும் கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details