சட்டவிரோத பேனர் வழக்கில் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த தவறியதாக தலைமை செயலர் மீது டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு பேனர் வைத்த விவகாரம் குறித்து தலைமை செயலர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு காணொளி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது, தலைமை செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருமண விழாவிற்கு 100 பேனர் வைக்க அதிமுக நிர்வாகி ராஜா என்பவர் விண்ணப்பித்ததாகவும், அதை மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல அரசு தரப்பில், கோயம்பேடு முதல் வானகரம் வரை வைக்கப்பட்டிருந்த 70 பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் பிறந்தநாள் விழா, காதணி நிகழ்ச்சி போன்றவற்றிற்கு பேனர்கள் வைப்பதாகவும், அரசியல் கட்சிகள் பேனர் வைப்பதை தவிர்க்க அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு பிரிண்டிங் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும், சில இடங்களில் சில பேனர்கள் வைக்கப்பட்டு வருவதாகவும், பேனர் வைக்கப்படுவதை தடுக்க வேண்டியது மாநகராட்சி ஊழியர்களின் கடமை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.