தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"மோடியை பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார்..!"- இளையராஜா கூறிய காரணம் என்ன? - சர்ச்சையைக் கிளப்பிய இளையராஜா

புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் சார்பில் வெளியான "மோடியும் அம்பேத்கரும்" என்ற நூலிற்கான முன்னுரையில் சட்டமேதை அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதியுள்ளார்.

இளையராஜா சர்ச்சை
இளையராஜா சர்ச்சை

By

Published : Apr 15, 2022, 8:19 PM IST

சென்னை:பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருக்கிறார். புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா மோடியின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து முன்னுரை எழுதியிருக்கிறார்.

இளையராஜா வழங்கிய முன்னுரை
அதில், 'இந்த இரண்டு ஆளுமை கொண்ட மனிதர்கள் சமூகத்தில் பலவீனமான சமூகப் பிரிவைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளுக்கு எதிராக வெற்றி பெற்றனர். இருவரும் வறுமை மற்றும் சமூகக் கட்டமைப்புகளை நெருக்கத்தில் இருந்து பார்த்தனர் மற்றும் அவைகளை அகற்ற கடும்முயற்சி செய்தனர்.
இருவரும் இந்திய நாட்டுக்காக பெரிய கனவு கண்டனர். மேலும், இருவரும் வெறும் சிந்தனை செய்வதில் மட்டும் இருந்து விடாமல் செயலில் நம்பிக்கை கொண்ட உண்மையான மனிதர்கள். சமீபத்தில், பிரதமர் மோடி அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாக செய்திகளில் படித்தேன். இது பெண்கள் மேற்படிப்புகளை மேற்கொள்வதற்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக சுதந்திரத்தை அளிக்கும்.
இது தவிர, இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டமும், பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவது குறித்த பிரதமரின் செய்தியும், பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணியை நினைக்கும்போது நினைவுக்கு வருகிறது. முத்தலாக் தடை மற்றும் பாலின விகித உயர்வு போன்ற பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை கவனித்திருந்தால் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்.

அவரது கனவுகளை நிறைவேற்றும் திசையில் இந்தியா எவ்வாறு நகர்கிறது என்பதை இந்த புத்தகம் மக்களுக்குத் தெரிவிக்கும் என்று நம்புகிறேன்' என இளையராஜா கருத்துரைத்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இளையராஜாவுக்கு எதிரான பதிவுகளும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

இதையும் படிங்க: சர்வதேச விருது பெற்ற இளையராஜா!

ABOUT THE AUTHOR

...view details