ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், தமிழ்நாட்டின் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் முக்கிய காரணிகள் ‘சந்தை வாய்ப்பு’ மற்றும் ‘தேவை’ என்று கண்டறிந்துள்ளனர். 6ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி (2016) அதிகபட்ச பெண் தொழில்முனைவோரைக் கொண்ட மாநிலமான தமிழ்நாட்டின் சிறு மற்றும் குறுந்தொழில் துறையின் பெண் தொழில்முனைவோரிடையே இந்த ஆய்வு செப்டம்பர் 2019ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2019ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பது ‘சந்தை வாய்ப்பு’ மற்றும் ‘தேவை’ போன்ற ஈர்ப்புக் காரணிகளின் கலவை தான் என்று ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொழில்முனைவில் ஈடுபடுவதற்கான முதன்மைக் காரணங்களாக பொருளாதாரக் காரணிகள் மட்டுமே இருப்பதில்லை என்பதும் ஆய்வு தெரிவிக்கும் முடிவாக உள்ளது.
பெண் தொழில்முனைவோர் தங்கள் பாதையை ஏன், எந்த முறையில் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து பயணிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினர். ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பின் (2016) அகில இந்திய அறிக்கையின்படி, இந்தியாவில் குறைந்த பட்சம் ஒரு கூலித் தொழிலாளியைப் பணியமர்த்திய, பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
2019 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பெண் தொழில்முனைவோரை நேர்காணல் செய்து தமிழ்நாட்டில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பெண் தொழில்முனைவோருக்கு ஊக்கமளித்து வணிகத்தில் ஈடுபடத் தூண்டும் காரணிகள் பின்வருமாறு:
- பேரார்வம், புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல், சவால்களுக்கான நாட்டம், சமூக விழுமியங்களை உருவாக்குதல்,
- வேலை-வாழ்க்கை சமநிலைக்கான ஆர்வம்
- சமூக ஆதரவு (கணவன் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து), மற்றும்
- நிறுவன ஆதரவு (அரசு உதவி மற்றும் மானியங்கள் போன்றவை)
ஐஐடி மெட்ராஸின் மேலாண்மை ஆய்வுத் துறையின் இணைப் பேராசிரியை மருத்துவர் ரூபஸ்ரீ பரல், ஐஐடி மெட்ராஸின் மேலாண்மை ஆய்வுத் துறையின் முனைவர் பட்ட அறிஞரான ஜாஸ்மின் பானுவுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தினார். இந்தக் கண்டுபிடிப்புகள் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஜர்னல் ஆஃப் எண்டர்பிரைசிங் கம்யூனிட்டீஸ்: பீபில் அண்ட் ப்ளேசஸ் இந்த குளோபல் எகானமி (https://doi.org/10.1108/JEC-12-2020-0206 ) இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரையாகவெளியிடப்பட்டன.
இத்தகைய ஆய்வுகளின் அவசியத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸின் மேலாண்மை ஆய்வுகள் துறையின் இணைப் பேராசிரியர் மருத்துவர் ரூபஸ்ரீ பரல், “பெண்களின் தொழில்முனைவு என்பது நாட்டின் பொருளாதாரம், புதுமை, வளர்ச்சி, வாழ்க்கைத் தரத்திற்கு பங்களிக்கும் ஒரு முக்கிய படியாகும்.
சமூக-பொருளாதார வளர்ச்சியில் பெண் தொழில்முனைவோரின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, பெண் தொழில் முனைவோர் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும், எளிதாக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் காரணிகளை ஆராய்வது மிகவும் முக்கியமானது.
இத்தகைய ஆய்வுகாளின் மூலம், பெண் தொழில்முனைவோரின் நல்வாழ்வை மேம்படுத்தவும் பெண் தொழில்முனைவோருக்கு உகந்த சூழலை வளர்ப்பதற்கும் சமூகத்தில் பாலின இடைவெளியைக் குறைப்பதற்கும் சிறந்த முன்முயற்சிகள், கொள்கைகள், திட்டங்களை உருவாக்க வாய்ப்புள்ளது.” என விவரித்தார்.