சென்னைஐஐடியில் கடந்த செப்.2 ஆம் தேதி ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் (MDA) தலைவர் டி.சந்திரசேகர் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட 'தமிழ் வழிப் பயிற்சி'த் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (செப்.4) என்பிடெல் (NPTEL)-ஐஐடி மெட்ராஸ், தமிழில் இலவச ஆன்லைன் சீராக்கத் திட்டத்தில் 'தமிழ் வழிப் பயிற்சி’யை வடிவமைத்து மேம்படுத்தியுள்ளது.
மொழி அடிப்படையிலான செயலாக்கத்தில் கடினமான டிஸ்லெக்சியா, ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் செயல்படுத்துவது சிரமமாக உள்ள சூழ்நிலையில், தமிழ்வழியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவை வழங்கும் வகையில் 'தமிழ் வழிப் பயிற்சி' திட்டத்தை எம்டிஏ வடிவமைத்து மேம்படுத்தி உள்ளது. தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம் ஐஐடி மெட்ராஸ், தமிழ்வழியில் கல்வி பயிலும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சீராக்கத் திட்டத்தை மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷனுடன் (MDA) இணைந்து அளிக்கிறது. என்பிடெல் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாக ஆன்லைன் வழியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு காரணமாக சிரமப்படும் குழந்தைகளைத் தொடக்க நிலையிலேயே சரியான நேரத்தில் கண்டறிந்து, அவர்களுக்கான தேவைகளின் அடிப்படையில் உரிய தீர்வுகளை வழங்கினால், ஆக்கப்பூர்வமான இளைஞர்களாக அவர்களை உருவாக்க முடியும். மொழி அடிப்படையிலான செயலாக்கத்தில் கடினமான டிஸ்லெக்சியா, ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடைமுறைப்படுத்துவது சிரமமாகவே இருந்து வருகிறது. எனவே, தமிழ்வழி தொடக்கப் பள்ளிகளில் படித்துவரும் டிஸ்லெக்சியா-வால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காணவும், தீர்வு வழங்கவும் எம்டிஏ ‘தமிழ் வழிப் பயிற்சி’யை வடிவமைத்து மேம்படுத்தி உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி,"பரந்த சமுதாயத்திற்கு ஐஐடி மெட்ராஸ்-ன் தொடர்பு குறித்த கேள்விக்கு இந்த முன்முயற்சி சக்திவாய்ந்த ஒரு பதிலாக இருக்கும். என்பிடெல் மூலமாக இந்த கல்வி நிறுவனம் தொழில்நுட்ப உதவியை வழங்குவது மட்டுமின்றி, அதன் முன்னாள் மாணவர்கள் தலைமையில் இந்த முன்முயற்சியை மேற்கொண்டு உள்ளது. ஏஐ4 பாரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளதைப் போன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழி அடிப்படையில் பிற மொழிகளிலும் இந்த முன்முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு மொழிகளிலும் இதனை கிடைக்கச் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
'தமிழ் வழிப் பயிற்சி'யின் தாக்கம் குறித்து எடுத்துரைத்த, சென்னை டிஸ்லெக்சியா அசோசியேஷன் (MDA) தலைவர் டி.சந்திரசேகர் கூறும்போது, "புள்ளிவிவரப்படி, 10 முதல் 15 விழுக்காடு அளவுக்கு குழந்தைகள் டிஸ்லெக்சியாவின் தாக்கம் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்வதும், அதனை மதிப்பீடு செய்து அதற்குரிய சீராக்கத்தை மேற்கொள்வதும் அவசியமாகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள இதுபோன்ற பள்ளிகளில் முன்கூட்டியே கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும்" என்றார்.